×

ரூ.5,300 கோடி தள்ளுபடி செய்து விட்டு திவாலான நிறுவனத்தை வாங்க தாராள கடன் கொடுத்த வங்கிகள்

* பதஞ்சலிக்கு ருசி சோயா கைமாறிய பின்னணி* குறுகிய காலத்தில் சந்தை மதிப்பு எகிறிய மர்மம்புதுடெல்லி: வங்கிகளின் நிதி நிலை மோசமாவதற்கு மிக முக்கிய காரணமாக, வராக்கடன் உள்ளது. பெரிய நிறுவனங்கள் பல கடன் வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்து விடுகின்றன. அவற்றை வங்கிகளால் திருப்பி வசூலிக்கவும் முடியவில்லை. திவால் நிலைக்கு வந்த நிறுவனங்களிடம் இருந்து சல்லிக்காசு கூட திரும்பப்பெற முடியாமல், வங்கிகளும் ஏறக்குறைய திவால் நிறுவனங்களை போலவே தள்ளாட வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜ ஒன்றிய அரசு ஆட்சிக்காலத்தில் வங்கிகளில் நிறுவனங்கள் செய்த மோசடி மிக அதிகம் என்ற பல்வேறு புள்ளி விவரங்களும் உணர்த்துகின்றன. இதை விட உச்சக்கட்ட அவலமாக, வழங்கிய கடனை வங்கிகளே ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதுதான். இப்படிப்பட்ட நிறுவனங்களை கையகப்படுத்தியவர்கள் பலர் பாஜவுக்கு நெருக்கமானவர்களாக கூறப்படும் தொழிலதிபர்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக காணப்படுகிறது. ருசி சோயா நிறுவன கடன் தள்ளுபடி விவகாரமும் ஏறக்குறைய இப்படிப்பட்டதுதான். பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள்  ருசி சோயா நிறுவனத்துக்கு கடன் வழங்கியிருந்தன. இதன்படி இந்த நிறுவனம் வாங்கியிருந்த கடன் சுமார் ரூ.12,146 கோடி. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கிக்கான பாக்கி மட்டும் சுமார் ரூ.1,816 கோடி. கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், இந்த நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. ருசி சோயாவின் பெரும்பகுதி கடன் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், கடன் தொடர்பாக செட்டில்மென்டுக்கு வங்கிகள் வந்தன. இந்த அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கி, ரூ.883 கோடி மட்டும் பெற்றுக் கொண்டு ருசி சோயாவின் கடன்களை தள்ளுபடி செய்ய முடிவுக்கு வந்தது. அதாவது, சுமார் ரூ.933 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதேபோல்தான் மற்ற வங்கிகளும் தங்கள் பங்கிற்கு கடன்களை தள்ளுபடி செய்தன. இந்த வகையில் மொத்தம் சுமார் ரூ.5,300 கோடியை தள்ளுபடி செய்தன. இந்த சூழ்நிலையில்தான், ருசி சோயாவை வாங்க கோத்ரெஜ் குழுமத்தை சேர்ந்த கோத்ரேஜ் அக்ரோவிட், இமாமி அக்ரோடெக், அதானி வில்மார், பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஏலத்தில் பங்கேற்றனர்.  இந்த நிலையில், கோத்ரெஜ், இமாமி நிறுவனங்கள் விலகின. களத்தில் அதானி, பதஞ்சலி நிறுவனங்கள்தான் இருந்தன. அதானி நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு ருசி சோயாவை வாங்குவது ஏறக்குறைய முடிவாகியிருந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என பதஞ்சலி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. கடன் மோசடி செய்த ரோட்டோமேக் நிறுவன உரிமையாளரின் மகளை அதானி வில்மர் நிறுவன நிர்வாக இயக்குநர் திருமணம் செய்ய உள்ளதாகவும், மோசடி நிறுவனத்துடன் சம்பந்தம் வைத்துக்கொள்பவரின் நிறுவனம் எப்படி பங்கேற்கலாம் என்பதுதான் பதஞ்சலியின் வாதம். இதைத்தொடர்ந்து அதானி வில்மர், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் ஏலத்தில் இருந்து திடீரென விலகியது. இது ருசி சோயாவை கையகப்படுத்தும் வாய்ப்பை பதஞ்சலி நிறுவனத்துக்கு மட்டுமே அளிப்பதாக அமைந்து விட்டது.   ருசி சோயாவை பதஞ்சலி நிறுவனம் கையகப்படுத்தும் கடன் தீர்வு திட்டத்துக்கு தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் 2019 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. இதுபோல் கடன் வழங்குநர் குழுவும் அனுமதி வழங்கியது. இந்த நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு கையகப்படுத்த பாபாதேவின் பதஞ்சலி நிறுவனம்  முன்வருகிறது. ஆனால், தனது கையிருப்பில் இருந்து வழங்கப்பட்ட தொகை ரூ.1,100 கோடிதான். எஞ்சிய ரூ.3,250 கோடியை, ருசி சோயாவுக்கு கடன் வழங்கி வசூலிக்காமல் தள்ளுபடி செய்த வங்கிகளே கடனாக வழங்குகின்றன. இதில் பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கடன் தொகை மட்டும் சுமார் ரூ.1,200 கோடி. இதுதவிர பஞ்சாப் நேஷனல் வங்கி சுமார் ரூ.700 கோடி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ.600 கோடி, சிண்டிகேட் வங்கி சுமார் ரூ.400 கோடி, அலகாபாத் வங்கி சுமார் ரூ.300 கோடி கடன் வழங்கின. அதாவது, கடன் மோசடி செய்து திவாலான நிறுவனத்தை கையகப்படுத்த, ஏமாந்த வங்கிகளே மீண்டும் கடன் வழங்கியுள்ளன. அதிலும், திவாலான நிறுவன பங்குகளுக்கு எதிராகத்தான் இந்த கடன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே ருசி சோயாவின் பங்கு மதிப்பு கிடுகிடுவென பல மடங்கு உயர்ந்து உச்சம் தொட்டது, பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. கடந்த 2019 டிசம்பரில் பதஞ்சலி நிறுவனம் ருசி சோயாவை தனது கையிருப்பாக ரூ.1,100 கோடி கொடுத்து கையகப்படுத்திய நிலையில், தற்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடி.ஒரே ஆண்டில் பல மடங்கு உயர்ந்த மதிப்புருசி சோயா நிறுவனத்தை கையகப்படுத்திய பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட முடிவு செய்தது. அப்போது ருசி  சோயாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.3.50 மட்டுமே. அதன்பிறகு ஒரே ஆண்டில் இந்த பங்கு மதிப்பு, வரலாறு காணாத ரூ.1,193 ஆக எகிறியது. பொதுவாக திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் நிறுவனங்களின் பங்குகளை விற்பனைக்கு வெளியிடும்போது, அந்த நிறுவனத்தின் பங்கில் குறைந்த பட்சம் 5 சதவீதமாவது பொதுமக்களிடம் இருக்கும். ஆனால், பதஞ்சலி நிறுவனம் ருசி சோயா பங்குகளை வெளியிடும்போது ஒரு சதவீதத்துக்கும் குறைவான பங்குகள் மட்டுமே மக்களிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ருசி  சோயா நிறுவனத்தை வாங்குவதற்காக வங்கிகளிடம் பெற்ற கடனுக்காக 99.97 சதவீத பங்குகள் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன.அன்று ரூ.1,000 கோடி: இன்று ரூ.35,360 கோடிபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ருசி சோயாவிடம் வாங்கிய பங்குகள் மதிப்பு, இன்று கற்பனைக்கே எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளன. அதாவது, ருசி சோயா நிறுவனத்திடம் சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் வாங்கிய பங்குகள் மதிப்பு சுமார் ரூ.35,360 கோடியாக உயர்ந்து விட்டது. வாங்கிய கடனை வசூலிக்க முடியாமல்தான் வங்கிகள் திவால் நடவடிக்கைக்கு வந்தன. நிறுவனத்தை கையகப்படுத்த பல ஆயிரம் கோடி கடன்களையும் தள்ளுபடி செய்தன.இதனால் வங்கிக்கு இழப்பு ரூ.5,300 கோடி. வாங்கிய நிறுவனத்துக்கு லாபம் பல்லாயிரம் கோடி….

The post ரூ.5,300 கோடி தள்ளுபடி செய்து விட்டு திவாலான நிறுவனத்தை வாங்க தாராள கடன் கொடுத்த வங்கிகள் appeared first on Dinakaran.

Tags : Banks ,Rusi Soya ,Patanjali ,Marmamboudelli ,Dinakaran ,
× RELATED பதஞ்சலி நிறுவன நீதிமன்ற அவமதிப்பு; வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு